Publisher | Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 432 |
Product ID | 9788193129531 |
ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ.இறையன்பு 'உலகை உலுக்கிய வாசகங்கள்' என்ற தலைப்பில் "தினத்தந்தி" ஞாயிறு மலரில் தொடர்ந்து 101 வாரங்கள் எழுதி வந்தார். அந்தத் தொடர் இப்போது 'தந்தி பதிப்பகம்' சார்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
சிந்தனையாளர்கள், ஆன்மிகவாதிகள், அறிவியல் அறிஞர்கள், சங்க காலப் புலவர்கள் வழங்கிய பொன்மொழிகளைக் கூறி அதற்கு ஆழ்ந்த விளக்கம் அளித்துள்ளார். உலகின் முதல் புரட்சியாளர் புத்தர், ஆர்க்கிமிடிஸ், சாக்ரட்டீஸ், ஸீஸர், சீன அறிஞர் சங் சூ, இயேசுநாதர், டெமஸ்தனிஸ், ஷேக்ஸ்பியர், அலெக்சாண்டர், போதிதர்மர், ஆதிசங்கரர், நபிகள் நாயகம், காந்தியடிகள் போன்றோர் உதிர்த்த உன்னத மொழிகள், நம்மை வசப்படுத்தும் வாசகங்கள் என்பதை அவருக்கே உரிய பாணியில் எடுத்துரைக்கிறார்.
உலகை உலுக்கிய வாசகங்களை வழங்கியதில் தமிழகத்திற்கும் தலையாய பங்குண்டு என்பதை பறைசாற்றுகிறார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகள். "தமிழ் இலக்கியத்தின் சாரத்தையும், பண்பாட்டின் வேரையும் கூற வேண்டுமெனின் இந்தப் பாடல் ஒன்றே போதும்; இதற்கு அகில உலகமும் இணையாகாது" என்பதை எடுத்துக் கூறி, "இவை உலகை உலுக்கும் வாசகங்கள் மட்டுமல்ல, உலகைக் குலுக்கும் சம்பவங்களை முடித்து வைக்கும் வாசகங்கள்" என்று முத்திரை பதிக்கிறார்.
உயர்ந்த வாசகங்கள் என்பது உச்சரித்தவர்களின் பெயரையும் தாண்டி காலங்களைக் கடந்து நிற்பதாகும். அந்த வகையில், "பத்து லட்சம் பேர் ஒரு பொய்யை நம்பினாலும் அது உண்மையாகாது" என்ற புத்தரின் மொழி தொடங்கி, "தூரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள்; நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள். ஏனெனில் பிறக்கும் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும்" என்ற நபி பெருமானின் அறிவுரை வரை பல்வேறு சான்றோர்களின் மொழிகளை எடுத்துக்கூறி அதற்கு அழகிய முறையில் விளக்கம் கூறி இருக்கும் நூலாசிரியரின் பாங்கு பாராட்டுக்குரியது.