Publisher | Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 192 |
Product ID | 9788193298602 |
தினத்தந்தி நாளிதழில் செவ்வாய்தோறும் வெளிவரும் அருள்தரும் ஆன்மிகம் இலவச இணைப்பில் ஜோதிடக் கலைமணி சிவல்புரி சிங்காரம் அவர்கள் இதயம் தொட்ட பழமொழிகள் என்ற தலைப்பில் 175 வாரங்கள் எழுதி வந்ததன் தொகுப்பே இந்நூல். இதில் 46 தலைப்புகளில் 300 பழமொழிகளும் அதற்கான விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. நமது நாட்டில் முன்னோர்கள் ஏராளமான பழமொழிகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை பழைய மொழிகள் தானே என்று உதாசீனப்படுத்தாமல், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வைர வரிகள் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான புது விளக்கங்களையும் தருகிறார்.
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது, ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று இருக்க வேண்டும். ஏனெனில் மூலிகை வைத்தியர்கள் வேரைக் கொண்டு வந்து கஷாயம் போடுவார்கள்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பது பழமொழி. ஊரார் பிள்ளை என்பது மனைவியைக் குறிக்கும் சொல். அவளை நல்ல முறையில் கவனித்தால் கருவிலே உள்ள தன் பிள்ளை தானே வளரும் என்பதாக புது விளக்கம் தருகிறார். மேலும் பல பழமொழிகளுக்கு ஆன்மிக, ஜோதிடரீதியில் அழகிய முறையில் விளக்குகிறார்.
அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது ஒரு பழமொழி. இங்கே அடி என்பது ஆண்டவனின் திருவடி என்றும் அவனது திருவடியைப் பணிந்தோருக்கு சேதாரம் இல்லை என்று கூறுகிறார். இதைப்போல இன்னொரு பழமொழி, ஐந்திற்கு இரண்டு பழுதில்லை & சிவாயநம என்ற பஞ் சாட்சரத்தை தினமும் உச்சரிரித்தால் சிவனது அருளுக்கு பாத்திரமாகலாம். வயதான காலத்தில் உச்சரிக்க முடியாமல் போனால் சிவா என்ற இரண்டு எழுத்தை மட்டும் உச்சரித்தால் நமக்கு சிறப்பான வாழ்க்கை அமையும். அதனால்தான் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இப்படி எண்ணற்ற பழமொழிகளுக்கு வியப்பூட்டும் விளக்கங்கள் உள்ளது.