Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 136 |
Product ID | 9788184766646 |
உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.