Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 240 |
Product ID | 9789388104005 |
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வரிகளைக் கொண்டு, சிறுவர்கள் தாங்களாகவே காட்சிகளாக்கிக்கொள்கின்றனர். அப்போது, எழுத்தாளர் எழுதாத பொருள்களும் உருவங்களும்கூட அந்தக் காட்சியில் வரக்கூடும். அது பரவசமான மனநிலையை நிச்சயம் அவர்களுக்குத் தரும். மனதளவில் அவர்களை நெகிழவும் செய்யும். புத்தகங்கள் அந்த மகத்தான பணியைச் செய்யக்கூடியவை. சிறுவர்களுக்காக எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. தன் வயதை மனதளவில் குறைத்துக்கொண்டும் தற்காலச் சிறுவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டும் எழுத வேண்டிய சிரமமான பணி. அவ்வாறு எழுதப்பட்ட நேர்த்தியான படைப்புகளே சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்றதாக அமையும். அந்தப் படைப்பின் வழியே அடுத்தடுத்து வேறு புத்தகங்களைத் தேடி சிறுவர்கள் செல்லவும் உதவும். தமிழில் அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஜெயமோகன். பெரியவர்களுக்கான படைப்புகளில் அவர் காட்டும் சிரத்தையைவிட, சிறுவர் நூலுக்கு அதிகம் செலுத்துகிறார். இமயமலைப் பகுதியில் கண்டெடுக்கப்படும் ‘மம்மி’யைக் கடத்திச் செல்ல முற்படுகிறது ஒரு கும்பல். அதைத் தேடிச் செல்வதாக, சஸ்பென்ஸோடு கொண்டுசெல்லப்படுகிறது ‘வெள்ளி நிலம்’ கதை. பரபரப்பான கதையில் புதிய இடங்கள், புதிய தகவல்களை அறிமுகம் செய்வதோடு, பண்பாடு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஜெயமோகன் தவறவில்லை. வரலாற்றுச் சம்பவத்தில் துப்பறியும் கதையைச் சுழல வைத்து நேர்த்தியாக, சிறுவர்களின் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது இந்நாவல். இதைப் படிக்கும்போது நீங்களும் இமயமலை, திபெத், பூட்டான் பகுதிகளில் நிச்சயம் பயணிப்பீர்கள்.