Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 448 |
Product ID | 9788184764703 |
இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத் தளங்களில் ஜெட் வேகத்தில் முன்னேறும் காலகட்டத்திலும் பாலியல் புரிதலில் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். திருமணமான இரண்டாவது நாளே காவல் நிலையப் படியேறி கண்ணைக் கசக்கும் மணமகள், மூக்கு சரியில்லை என்பதற்காக திருமணப் பந்தத்தை முறித்துக்கொண்ட மணமகன், பெருகும் விவாகரத்து வழக்குகள், கள்ளத்தொடர்புகளால் ஏற்படும் விபரீதங்கள்... என அத்தனைக்கும் பின்னணியாக இருப்பது பாலியல் புரிதலற்றதனம்தான்! காமம், பொத்திப் பதுக்க வேண்டிய ஒன்று அல்ல; புரிந்துகொள்ள வேண்டிய பக்குவம் அது. குடும்ப உறவுகளைச் சுக்குநூறாக்கும் ஆயிரக்கணக்கான பிரச்னைகளில் 80 சதவிகிதத்துக்கும் மேல் செக்ஸ்தான் பின்னணியாக இருக்கிறது. பாலியல் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்தும் விதமாக நாளுக்கு நாள் ‘இல்லற அவலங்கள்’ அதிகமாகி வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் இல்லற உண்மைகளை உரக்கச் சொல்லவும், உறவுகள் குறித்த நெறிகளைச் சொல்லி வழிநடத்தவும், தனி மனிதத் தவறுகளைத் தவிர்க்கவும், எது சரி எது தவறு என்கிற தெளிவை ஏற்படுத்தவும் டாக்டர் நாராயண ரெட்டி மிகுந்த சிரத்தையோடு வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை இந்த நூலில் பகுத்துக் காட்டி இருக்கிறார். ‘சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பது தவறு. கலை என்றாலே சொல்லித் தெரிந்துகொள்வதுதான்’ என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் டாக்டர் நாராயண ரெட்டி, வாத்ஸாயனரின் அத்தனைவிதமான பார்வைகளையும் ஆய்வுகளையும் மிக எளிமையான விளக்கமாக எடுத்துரைக்கிறார். பெண்களை மிகுந்த கௌரவத்துடனும், அவர்கள் தரப்பிலான எதிர்பார்ப்புகளை மிகச் சரியாகக் கணித்தும் சொல்லி இருக்கிறது காமசூத்திரம். வாத்ஸாயனர் விளக்கும் வாழ்வியல் நுட்பங்களை ஏழு தொகுதிகளாகவும், 36 அத்தியாயங்களுமாக மிகத் தெளிவாக தமிழ்ச் சமூகத்துக்குப் படைத்தளித்திருக்கும் டாக்டர் நாராயண ரெட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இல்லறம் நல்லறமாக செழிக்க எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ‘நவீன குடும்ப வாழ்வுக்கான பழங்கால இந்தியக் கையேடு’ இந்த நூல்!