அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்ப்பாடல்கள் இறையருளால் தோன்றியன. இப்பாடல்கள் முருகப்பெருமானால் அடியெடுத்துக் கொடுக்கப்பெற்றுப் பாடப்பெற்றனவாகும். உலகியல் வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டி மனிதன் தன் இழி நிலையை உணர்ந்து தன்னைத்தானே திருத்திக் கொள்ளுமாறு உணர்த்தச் செய்தலும் கருதத்தக்கது. பத்தி விளைவும், அருளின் மேன்மையும் உடைய இப்பாடல்கள் சந்தத் தமிழால் விளங்கி இசை விளங்கப் பாடப்படுவன.
இவையனைத்தும் தோத்திரப் பாடல்களாகும். நற்பயன் தந்து மக்களை இனிது வாழச்செய்யும் இத்தகு அருட்பாடல்களுள் தற்போது கிடைக்கப் பெற்றவை 1325 என்பர். அவற்றுள் 108 பாடல்கள் மட்டும் திரட்டி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அறுபடைவீட்டு அழகன் திருப்புகழாக அமைந்துள்ளது. இப்பாடல்களுக்கு உரிய விளக்கவுரையும் தரப்பட்டுள்ளது. அன்பர்கள் இனிது ஓதி முருகப்பெருமான் திருவருளில் தோய்ந்து விளங்குவார்களாக.