Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 344 |
Product ID | RMB282980 |
Maperum Sabaithanil [மாபெரும் சபைதனில்]
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு அது. இயற்கையின் எழிலும் செயற்கையின் பிரமாண்டமும் இணைந்த அந்தக் கடலோர நகரம், சனிக்கிழமை மதிய நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
சுவை மிகுந்த ஐரோப்பிய உணவு வகைகளுக்குப் பெயர்போன அந்த உணவகத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். யோகா பயிற்றுநர். விடுமுறை நாள்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துச் செலவழிக்கத் துடிப்பவர், இப்போது, தான் விரும்பிய Barbeque உணவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய அலைபேசி ஒளிர்கிறது. எடுத்துப் பார்த்தால், அடையாளம் தெரியாத எண். அழைப்பைப் புறக்கணித்து கரீபியன், ஸ்பானிய உணவுப் பெயர் ஆராய்ச்சியில் மூழ்கிப் போகிறார். தொடர்ந்து ஒலிக்கிறது அலைபேசி. எடுத்து சலிப்புடன் பேசத் தொடங்கினால், மறுமுனை கேட்ட கேள்வி அவருக்கு அதிர்ச்சியைத் தருகிறது. `சென்ற புதன்கிழமை மாலை 6 மணி 47 நிமிடத்திற்கு நகரின் அந்தக் குறிப்பிட்ட சாலையில் ஒரு வாடகைக் காரில் பயணம் செய்தீர்களா?’ ஒரு நிமிடம் ஆடித்தான்போனார் அந்தப் பெண். சுதாரித்துக்கொண்டு அவர் அலைபேசிச் செயலியை ஒருமுறை சரிபார்த்தார்.கரின் அந்தக் குறிப்பிட்ட சாலையில் ஒரு வாடகைக் காரில் பயணம் செய்தீர்களா?’ ஒரு நிமிடம் ஆடித்தான்போனார் அந்தப் பெண். சுதாரித்துக்கொண்டு அவர் அலைபேசிச் செயலியை ஒருமுறை சரிபார்த்தார்.அது வெறும் ஆறு நிமிடப் பயணம் மட்டுமே. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையே’ என்று பதற்றத்துடன் பதில் அளிக்கிறார். `உடனடியாக உங்கள் வீட்டிற்குத் திரும்ப முடியுமா’ என்கிறது மறுமுனை. அடுத்த அரை மணி நேரத்தில் அந்தப் பெண்ணின் குடியிருப்பில் நுழைகிறது ஒரு அரசு வாகனம். சில நிமிடங்களில் அதிகாரத் தோரணையோடு ஒலித்த அழைப்பு மணி. கதவைத் திறந்தால் உடல் முழுக்கக் கவச உடையோடு மூன்று அலுவலர்கள். ``நீங்கள் பயணம் செய்த வாகன ஓட்டுநரைக் கொரோனா நோய் தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மீறினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை.” அதிர்ச்சியில் உறைந்த யோகா ஆசிரியரின் கண்கள் தொலைக்காட்சியை நாடுகின்றன. சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையின் உதவியோடு நோய்த்தொற்று பரவக் கூடியவர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறோம் என்று உயர் அரசு அலுவலர்கள் விலாவாரியாக விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், கேளிக்கைகளுக்கு நடுவே கொரோனா வைரஸ் ஊடுருவியது எப்படி என்று மருத்துவர்கள் பேசுகிறார்கள். அடுத்த நொடியில் அந்நாட்டின் பிரதமர் திரையில் தோன்றி இந்த நோய்த்தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்ற பட்டியலிடுகிறார். `வெளிநாட்டுத் தொழிலாளர் நலனும் இந்நாட்டுக் குடிமக்களுக்குச் சமமானதே’ என்ற உறுதியை அளிக்கிறார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், இந்த நோய்த் தொற்றால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து நுணுக்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரின் பெயர் `விவியன் பாலகிருஷ்ணன்’ என்று திரையில் தெரிகிறது. ஆம், அவர் சிங்கப்பூர் என்ற கனவு தேசத்தைச் சேர்ந்தவர்.
கண்ணுக்குப் புலப்படாத எதிரியோடு போரிடுவது எப்படி என்பதைக் கற்றுத்தேர்ந்த அந்தக் குட்டி தேசத்தின் வளர்ச்சி அபாரமானது. `தென்கிழக்காசியாவின் குப்பைத்தொட்டி’ என்று ஏளனம் செய்யப்பட்ட ஒரு சிறு நகரம், வெறும் ஐம்பதே ஆண்டுகளில் `கிழக்காசியப் பொருளாதாரப் புலி’ என்று புகழப்படுவது எப்படி? 200 ஆண்டுகளுக்கு முன் வெறும் 180 மீனவர்கள் சுற்றித்திரிந்த கடற்கரையில் இன்று 50 லட்சம் மக்கள் உலகத்தர வசதிகளோடு வாழ்வது எப்படி சாத்தியம்? மூன்றே வருடங்களில் வீழ்ந்து நொறுங்கிவிடும் என்று கணிக்கப்பட்ட ஒரு குட்டி தேசம், இன்று உலகமே வியந்து பார்க்கும் உயரத்தை எட்டிய அதிசயம் எப்படி நிகழ்ந்தது? கடந்த அறுபது வருடங்களில் வலிமையான தலைவர்களும், வல்லரசுகளும் தோன்றி மறைந்த உலக மேடையில், நிலையான ஆட்சி மூலம் சிங்கப்பூர் தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ரகசியம் என்ன?
இத்தனை கேள்விகளுக்கும் ஒரு பதில்தான். `லீகுவான்யூ.’ தொடர்ந்து 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமர்... பல்வேறு அரசுப் பொறுப்புகளில் 56 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தியவர். ஒரு சிறு துறைமுக நகரத்தை உலகமே வியக்கும் வகையில் உயர்த்திக் காட்டியவர். நான்கு தலைமுறைகளுக்கு முன் சீனாவிலிருந்து குடியேறிய குடும்பப் பின்னணி கொண்ட லீயின் குடும்பம் வசதியானதுதான். ஆனால் அவர் தந்தையின் சூதாட்டப் பழக்கத்தால் செல்வம் கரைந்திட, தாயின் சேமிப்புதான் அவரை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க அனுப்பியது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைக் கண்கூடாகப் பார்த்துத் தாய்நாடு திரும்பியவர், அரசியலில் ஈடுபட்டதில் ஆச்சர்யமில்லை.
மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக பாராளுமன்றம் நுழைந்தவர், 1959-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். நாட்டின் நலன் கருதி மலேசியக் கூட்டமைப்பில் இணைந்த முயற்சி இரண்டே வருடங்களில் தோல்வியைச் சந்திக்கிறது. கூட்டமைப்பிடமிருந்து மலேசியப் பாராளுமன்றம் சிங்கப்பூரை வெளியேற்றுகிறது. கூட்டுக் குடும்பத்திடமிருந்து தூக்கியெறியப்பட்டு நடுத்தெருவில் தன்னந்தனியே போராட வேண்டிய சூழல் அது. உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காத ஒரு சிறு துறைமுக நகரம் சிங்கப்பூர். அதற்கென்று ஒரு முழுமையான ராணுவம்... ஏன், காவல்துறைகூட முறையாகச் செயல்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. குடிக்கத் தண்ணீர்கூட இறக்குமதி செய்திட வேண்டும். சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துவந்த பிரிட்டன், தன் படைக்குடியிருப்பை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது கூடுதல் சிக்கலை உண்டாக்குகிறது. நிலவளம் இல்லாத ஒரு நாட்டின் இரண்டு லட்சம் மக்களோடு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி ஒரு தனி மனிதர் உறுதியோடு உழைத்து வென்ற வரலாறுதான் சிங்கப்பூரின் வெற்றிக்கதை.