Publisher | Suriyan Pathippagam [சூரியன் பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | 1 |
Number of Pages | 256 |
Product ID | RMB25796 |
திருவிழா என்றில்லாவிட்டாலும், ஏதேனும் பண்டிகை என்றில்லாவிட்டாலும், பொதுவாகவே இப்போதெல்லாம் கோயில்களில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குழுமுவதைக் காண முடிகிறது. மலர்ந்த முகத்துடன் தங்கள் கோரிக்கை நிறைவேறியதற்காக நன்றி சொல்ல வந்திருப்பவர்கள்; ஆர்வம் பொங்கும் முகத்துடன் தங்கள் எண்ணம் ஈடேற வேண்டுமே என்ற ஏக்கத்துடன் வந்திருப்பவர்கள்; எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், பக்தி செய்வது தன் கடமை என்ற ஒரே நேர்க் கொள்கையோடு வந்திருப்பவர்கள் என்று பல வழிகளில் பக்தி செலுத்தும் அன்பர்களைக் காண முடிகிறது. பிரபலமான கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமுகிறார்கள். இவர்களில் சிலர் அந்தந்தப் பகுதிகளிலேயே பிறந்து, வாழ்ந்து வருபவர்களாக இருப்பார்கள். சிலர் வேலை, திருமணம், வீடு மாற்றம் காரணமாக இங்கிருந்து வேறிடங்களுக்குச் சென்று வசிப்பவர்களாகவும், இப்போது சொந்த ஊருக்குத் திரும்பியிருப்பவர்களாகவும் இருப்பார்கள். சிலர் ஆன்மிக தல யாத்திரையை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவ்வளவாக பிரபலமில்லாத கோயில்களில் அந்தந்த கோயில்களின் உற்சவ நாட்களில் மட்டும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவதும், பிற நாட்களில் அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைவதும் உண்டு. இந்த நிலைமை 108 திவ்ய தேசக் கோயில்களுக்கும் பொருந்துகிறது. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துவைத்த இந்தத் திருக்கோயில்களில் பல, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதும்; தொலைவு, பயண நேரம், போக்குவரத்து வசதிக் குறைவு போன்ற காரணங்களால் சிலவற்றிற்கு பக்தர்கள் குறைந்த அளவே வருவதுமாக இருக்கிறது. ஆனால் தன்னைக் காண இயலாத நிலையிலுள்ள பக்தர்களை, உற்சவராக, வீதிவுலா வந்து அவரவர் இல்லங்களுக்கு முன் நின்று தரிசனம் காட்டும் இறைவனின் பெருங்கருணை, பேரானந்தத்தை அளிக்க வல்லது. அதேபோன்றதுதான் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்களும். இவை அந்தக் கோயில்களை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து, உங்கள் மடியில் நிர்மாணிக்கின்றன. இப்போது உங்கள் கரங்களில் தவழும் 108 திவ்ய தேச உலா புத்தகமும் அப்படிப்பட்டதுதான். அபூர்வமான புகைப்படங்களும் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. பரவசத்தோடு வழிபட வண்ணப்படங்களும் உண்டு. இது முதல் பாகம். இந்த பாகம் மட்டுமன்றி, திவ்ய தேச உலாவின் அடுத்தடுத்த பாகங்களும் உங்கள் பக்தி உணர்வுக்கு திவ்ய பிரசாதங்களாக அமையவிருக்கின்றன.